தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் உயர்நீதிமன்ற உத்தரவின்படி திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 57 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் பல்வேறு கன்னட அமைப்புகள் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்பதை கண்டித்து போராட்டம் நடத்தியதுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப்படத்திற்கு முன்பாக மாலை போட்டு ஒப்பாரி வைத்து, கருமாதி செய்தனர். இதனை கண்டித்து திருச்சியிலும் அய்யாக்கண்ணு தலைமையில் கர்நாடகா முதல்வர் சித்தாராமையாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து கருமாதி செய்ததுடன் அதற்கு இரண்டாம் நாள் பால் தெளித்தனர்.
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொடுக்க கூடாது என்று கர்நாடக மாநிலம் முழுவதும் இன்று நடைபெறும் பந்தை கண்டித்தும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாதம், மாதம் காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறக்காததை கண்டித்தும், கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா உருவ படத்தை கருமாதி செய்ததை இன்று காவிரி ஆற்றில் கரைக்கும் இறுதி சடங்கும், காவிரியில் தண்ணீர் திறக்கும் வரை காவிரி ஆற்றுக்குள்ளேயே கூடாரம் அமைத்து காத்திருப்பு போராட்டம் நடத்திட ஓயமாறி இடுகாடு வடபுறத்தில் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஸ்ரீரங்கம் சரக காவல்துறை உதவி ஆணையர் நிவேதாலட்சுமி மற்றும் காவல்துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கர்நாடக அரசு தண்ணீர் திறக்கும் வரை நாங்கள் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்து காவிரி ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை மீட்பதற்காக தீயணைப்பு துறையினர் ஆற்றில் இறங்கி அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வெளியே அழைத்து வந்து கைது செய்தனர்.
மேலும், காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவின் தீர்ப்பு விசாரணையில் இருக்கும் போது திருச்சி மாநகர காவல்துறையினரும், திருச்சி மாநகராட்சி ஊழியர்களும் ஒன்றிணைந்து காத்திருப்பு போராட்டத்திற்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தை பிரித்தும், அதன் உள்ளே வைத்திருந்த பொருட்களையும் அப்புறப்படுத்தினர்.
இந்நிலையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கர்நாடக அரசை கண்டித்து திருச்சி மத்திய பஸ் நிலையம் வளாகத்தில் கர்நாடக செல்லும் பஸ்ஸுகளை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது