தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்த நாளை சனாதன ஒழிப்பு நாளாக சூளுரைப்போம் என்ற தலைப்பில் திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகளின் தலைமையில் தந்தை பெரியாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடப்பட்டது.
முன்னதாக அனைவரும் ஒன்று சேர்ந்து பதாகைகள், கொடிகள் ஏந்தியும் முழக்கமிட்டவாறு தந்தை பெரியார் வேடம் அணிந்தும் அங்கிருந்து ஆட்டோக்களில் ஊர்வலமாக சத்திரம் பேருந்து நிலையம் அண்ணாசிலை மற்றும் ஸ்ரீரங்கம் தேவி தியேட்டர் அருகில் என இரண்டு இடங்களில் ம.க.இ.க சீனிவாசன் தலைமையில் முழக்கமிட்டு பிரச்சாரம் செய்தனர். பிறகு ஸ்ரீரங்கம் கோயில் முன்பு உள்ள தந்தை பெரியாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து சனாதனத்தை ஒழித்து கட்ட பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் வழியில் போராடுவோம் என முழக்கமிட்டனர், அதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் கோவன், மாவட்ட செயலாளர் ஜீவா, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட இணைச் செயலாளர் மணலிதாஸ், மக்கள் அதிகாரத்தின் மாவட்ட செயலாளர் செழியன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் சீனி விடுதலை அரசு, தமிழ்த் தேச மக்கள் முன்னணியின் வழக்கறிஞர் கென்னடி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மக்கள் அதிகாரம் மாநகர செயலாளர் கார்க்கி, மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் ஆதி, ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் மாநகர செயலாளர் சிவா, தந்தை பெரியார் திராவிடர் கழகம் வின்செண்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ம.க.இ.க உறுப்பினர் லதா இது எங்கள் தமிழ்நாடு தந்தை பெரியாரின் வீடு என்ற புரட்சிகர பாடலை பாடினார். பிறகு அனைவரும் தந்தை பெரியாரின் பிறந்தநாளை கொண்டாடும் அதே வேலையில் அத்தினத்தை சமூக நீதி நாளாக மட்டுமல்லாமல் சனாதன ஒழிப்பு நாளாகவும் கடைபிடிப்போம் என உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். அனைத்து அமைப்புகளின் தோழர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் திரளாக குடும்பத்துடன் கலந்து கொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்தனர். இறுதியாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாவட்ட துணைத் தலைவர் செந்தில் நன்றி கூறி நிகழ்வினை முடித்து வைத்தார்.