திருச்சி கே.கே நகர் மெயின்ரோட்டில் கடந்த 1995ஆம் ஆண்டு மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் மூடப்பட்ட சபரி மில் தொழிற்சாலை இடம் “தி அமெல்காமேட்டடு கோல்பீல்ட் லிட்” நிறுவனத்தின்கீழ் தற்போதுவரை பராமரிப்பில் இருந்து வருகிறது. இந்தநிலையில், டைட்டானிக் கப்பல் பொருட்காட்சிக்காக வாடகைக்காக விடப்பட்ட இந்த இடத்தை பொருட்காட்சி நிர்வாகத்தினர் சுத்தம்செய்து வாகனங்கள் நிறுத்துவதற்காக ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில், கேகே நகரை சேர்ந்த திமுக வர்த்தக அணியைச் சேர்ந்த நிர்வாகியான, செந்தமிழ் செல்வன் என்பவர் சபரிமில்லுக்குச் சொந்தமான சுமார் ஒன்றரை ஏக்கர் இடத்தினை தனது அடியாட்களுடன் ஆக்கிரமித்து காம்பவுண்ட் சுவர் அமைத்துள்ளார்.
சபரிமில் நிர்வாகத்தினர் கேகேநகர் காவல்நிலையத்தில் புகாரளித்தும், அமைச்சரின் ஆதரவாளர் என்பதனாலும் ஆளுங்கட்சியினர் என்பதாலும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனிடையே, திமுக நிர்வாகியால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் சபரி மில்லுக்கு சொந்தமான இடம் என்ற அறிவிப்பு போஸ்டரை ஒட்டச்சென்ற வழக்கறிஞர்களை திமுக நிர்வாகியான செந்தமிழ் செல்வன் தனது அடியாட்களுடன் சென்று மிரட்டல் விடுத்ததுடன் கதவை பூட்டிவிட்டு, யாரும் வெளியே செல்லமுடியாது என அனைவரும் கொன்றுவிடுவோம் என கொலைமிரட்டல் விடுத்த சம்பவமும் அரங்கேறியது.
இதனையடுத்து அவசர எண் 100க்கு தகவல் அளித்ததை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திமுக நிர்வாகி மற்றும் அடியாட்களை அங்கிருந்து வெளியேற்றினர், இதுதொடர்பாக இரு தரப்பினரையும் காவல் நிலையத்தில் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாநகர காவல் ஆணையரிடம் சபரிமில் நிர்வாகம் சார்பில் புகார் அளித்தபிறகு, நிலஅபகரிப்பு பிரிவுக்கு அனுப்பப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க தனிக்குழு அமைத்தும் தனிக்குழுவினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர். இது அமைச்சர் சார்ந்த பிரச்சனை தலையிட்டால் நல்லது இல்லை என்றும் நிர்வாகத்தை மிரட்டுவதாகவும், திமுக ஆட்சியில் தற்போது வரை சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாகவும், அனைத்து ஆவணங்கள் கையில் இருந்தாலும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல திட்டமிட்டு ஆக்கிரமித்து அபகரித்து விட்டனர் என்றும், உடனடியாக போலீசார் துரித நடவடிக்கை எடுத்து அபகரித்து உள்ள இடத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துக் கொண்டனர்.