தூத்துக்குடியை சேர்ந்த கவின் என்ற வாலிபரின் ஆணவ கொலையை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்குபுதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். டாக்டர் சிவா கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகம்,மாவட்ட செயலாளர் பாலு ஆகியோர் வரவேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் அறிவழகன்,சதீஷ் ராசு, தினகரன்,பிச்சைமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-கவின் ஆணவ படுகொலை சம்பவத்தில் சிபிசிஐடியின் விசாரணை திருப்திகரமாக இல்லை. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். கடந்த 2011ம் ஆண்டு முதல் 16 ம் ஆண்ட வரை நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆணவ படுகொலைகள் நடந்து வந்தது. இது தொடர்பாக அப்போது இருந்த அரசு நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தற்பொழுதும் இந்த சம்பவம் தொடர் கதையாக நடந்து வருகிறது.எனவே தமிழக அரசு ஆணவ படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். இந்த சட்டத்தில் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து அவர்கள் மீதான வழக்குகளை உடனடியாக நடத்தி தீர்ப்பு வழங்க தனி விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும். மேலும் பள்ளி, கல்லூரிகளில் ஆணவ படுகொலைகள் குறித்து மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.திராவிட இயக்கங்கள் தங்களது கொள்கையிலிருந்து விலகி செயல்பட்டு கொண்டு இருப்பது கண்கூடாக தெரிகிறது. திருச்சியில் இன்று உறையூர் பகுதியில் மது ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெற உள்ளது. சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து தற்பொழுது பேசுவதற்கு ஒன்றுமில்லை இவ்வாறு அவர் கூறினார்.