திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை அருகே மாநகராட்சி கட்டிடத்தில்,திருச்சி பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருவரும் திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி எம்பி துரை வைகோ, “பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் தமிழகத்திற்கு வந்து பயிற்சி பெற்று தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாக தெரிவித்த மத்திய இணையமைச்சர் ஷோபாவிற்க்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ‘ஷோபா ஏற்கனவே ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை குற்றம் சாட்டி மன்னிப்பு கேட்டவர். நேற்று கூட திருச்சியில் அவருக்கு பதாகைகள் வைத்து வரவேற்பு அளித்துள்ளனர். ஆனால், தமிழகத்தில் மதவாத பிளவுவாத சக்திகள் ஒருபோதும் கால் ஊன்ற முடியாது. தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சியில் ஷோபா நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், தமிழ் இன உணர்வு எங்கே சென்றது?” என்ற கேள்வியும் எழுப்பி உள்ளார். மேலும், மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் வரி பகிர்வில் நடந்து கொள்கிறது. அதைத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார் என்றார்.