காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நிர்வாகிகளின் மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் திருச்சி ஹோட்டல் அருண் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்தக் மண்டல கூட்டத்திற்கு காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கென்னடி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் ஹென்றி கலந்து கொண்டு காவல் சித்திரவதை, காவல் மரணம், போலி மோதல் சாவு போன்ற இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து சிறப்புரையாற்றினார்.
இந்த மண்டல கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:-
தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து நேரடி கள ஆய்வின் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் மேலும் சிபிசிஐடி, என் ஐ ஏ அலுவலகங்களிலும் இதே ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும், மதுரை மாவட்ட ஆட்சியர் உயர் நீதிமன்ற வழக்கில் வழங்கப்பட்டுள்ள உடற்கூறாய்வு குறித்த தீர்ப்பின் நகலை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் நேரடியாக சென்று மருத்துவக் கல்லூரி தலைவரை சந்தித்து கொடுப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தின் மாவட்ட கட்டணத்தை பலப்படுத்த தமிழகத்தை நான்கு மண்டலமாக பிரிப்பது என முடிவு செய்யப்பட்டு வடக்கு மண்டலமாக சென்னையும் மேற்கு மண்டலமாக கோவையும் தெற்கு மண்டலமாக மதுரையும் மத்திய மண்டலமாக திருச்சி ஆகிய நான்கு மண்டலமாக பிரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தில் உறுப்பினராக உள்ள அரசியல் கட்சிகள் இயக்கங்களை சேர்ந்த பொறுப்பாளர்களை கொண்டு மாவட்ட கட்டமைப்பை வலுப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 26 ஆம் தேதி சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான ஐநாவின் ஆதரவு தினத்தை முன்னிட்டு சித்திரவதைக்கு எதிரான பிரச்சாரத்தை சென்னையில் உள்ள மனித உரிமை ஆணையத்தில் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது அதேபோல் மனித உரிமை காப்பாளர் ஸ்டேன் சாமி அவர்களின் நினைவு நாளான ஜூலை 5ஆம் தேதி வரை பிரச்சார இயக்கம் மாநிலம் தழுவிய அளவில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.