தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில பொது குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவி மினி ஹாலில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் புரவலர் விசுவநாதன் தலைமை தாங்கினார். மாநில இளைஞர் அணி தலைவர் அரவிந்தசாமி, கடலூர் மாவட்ட தலைவர் வெங்கடேசன், பெரம்பலூர் மாவட்ட தலைவர் சிவசாமி, அரியலூர் மாவட்ட தலைவர் சின்னப்பன், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களாக:- சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் சொன்னது போல கரும்பு டன்னிற்கு ரூபாய் 4000 கரும்பு நடவு மானியமாக ஏக்கருக்கு ரூபாய் 15,000 சேர்த்து அறிவிக்க வேண்டும் எனவும், ஆறுகள் ஏரிகள் குளங்கள் பெரிய அணைகள் பிரதான வாய்க்கால்கள் கிளை பாசன வாய்க்கால்கள் தூர்வாரி புணரமைக்கவும், ஆறுகளில் கரை புரண்டு வருகின்ற வெள்ள நீரை சேமித்து வைத்து நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க தடுப்பணைகளை கட்ட கோரியும், காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவில் முடிக்கவும் திருச்சி மாவட்டம் உமையாள்புரம் மருதூர் இடையே காவிரியில் கதவுடன் கூடிய தடுப்பணை கட்டவும், அரியலூர் மாவட்டம் தூத்தூர் தஞ்சை மாவட்டம் வாழ்க்கை இடையே கொள்ளிடத்தில் கதவுடன் கூடிய தடுப்பணை கட்டவும் வருகின்ற பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் புரவலர் விசுவநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- முந்தைய ஆட்சியில் நெல் நடவு மானியம் வழங்கியது போல ஹெக்டருக்கு 8000 நடவு மானியமும் ஒரு ஆதார் அட்டைக்கு 100 கிலோ விதை நெல் கொடுக்க கோரியும் மக்காச்சோளத்தை அரசே கொள்முதல் செய்வதோடு 100% மக்காச்சோளம் விதை வழங்க வேண்டும் இடுபொருள் கொடுப்பதை நிறுத்தி அதற்கு பதிலாக பின்னேர்ப்பு மானியமாக ஏக்கருக்கு 10,000 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வருகிற பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்க வேண்டும் அப்படி அறிவிக்க தவறினால் விவசாயிகளை ஒன்று திரட்டி வருகின்ற ஏப்ரல் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் சென்னையில் உள்ள தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தார்.