திருச்சி மாவட்டம், நம்பர் ஒன் டோல்கேட் அடுத்துள்ள தாளக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கீரமங்கலம் கிருஷ்ணா நகர் முத்தமிழ் நகர், அழகு நகர், இந்திரா நகர், அய்யாத்துரை நகர், தாளக்குடி மெயின் ரோடு, பள்ளி வாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக போதிய குடிநீர் வசதி இன்றி பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, எங்கள் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக போதிய அளவு குடிநீர் வினியோகம் இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியிருக்கிறோம்.

மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இந்த ஊராட்சியில் இதுபோன்ற அடிப்படை தேவைக்கு கூட குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது மன வேதனையை அளிக்கிறது. காலை மாலை என இரு நேரத்திலும் தெருக்குழாய், தனிநபர் வீட்டு குடிநீர் குழாயில் தண்ணீர் வழங்கிய ஊராட்சி நிர்வாகம் கடந்த மூன்று மாதங்களில் காலை மட்டும் குடிநீர் வழங்கி வருகிறது. சில நாட்களில் தெருக்குழாயில் மட்டும் குடிநீர் வந்தது. தற்போது அதுவும் சுத்தமாக வருவதில்லை. என்றாவது ஒரு நாள் திடீரென தெருக்குழாயில் தண்ணீர் வரும். அதன்பின் இன்று வருமோ ? நாளை வருமோ ? என காலி குடங்களுடன் நாங்கள் தெருக்குழாய் முன்பு காத்திருந்து ஏமாற்றத்துடன் செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

ஆண்டுதோறும் குடிநீர் வரி செலுத்தும் தனிநபர் குடிநீர் குழாய் இணைப்பு பெற்றுள்ளவர்களும் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். இதற்கு யார் பொறுப்பாக முடியும். இதுகுறித்து ஊராட்சி செயலரிடம் பலமுறை வாய்மொழியாகவும், கோரிக்கை மனுவாகவும் அளித்து முறையிட்டும் பயனில்லை. அதற்கு அவர் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது நாளை குடிநீர் வந்துவிடும் இன்று வந்துவிடும் என கூறி கடந்த மூன்று மாதங்களாக காரணம் சொல்லி மெத்தன போக்கை கடைபிடித்து வருகிறார்.

ஆனால் இதற்கு மாறாக ஊராட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் வாசிக்கும் பகுதியில் மட்டும் 24 மணி நேரமும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஊராட்சியில் உள்ள பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யாமல் முக்கிய நபர்களின் விவசாய நிலங்களுக்கும், தோட்டங்களுக்கும் 24 மணி நேரமும் குடிநீரை வழங்கி வருகின்றனர். இது குறித்து கண்டு கொள்ளாத ஊராட்சி செயலாளர் எங்களை வஞ்சிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகவும் உடனடியாக ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் சீரான தண்ணீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் ,மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்