அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருச்சி வடக்கு மாவட்ட கழகம் சார்பில் சட்டமன்ற ஸ்ரீரங்கம் தொகுதி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், திருவானைகாவல் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சார்பாக தொண்டைமான் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சிறப்புரையாற்றினார்.
முன்னதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்… நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம். கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி பேசியதில் எங்களுக்கு எந்த முரண்பாடும் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழ்நாட்டின் தலைமை யார் என அமித்ஷா கூறிப்பிட்டாரோ அது தான் எனது கருத்தும். அதிமுகவிற்கும் எங்களுக்கும் முரண்பட்ட கருத்துக்கள் இருந்தாலும் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளோம்.
மூன்றாவது மொழியாக ஒரு இணைப்பு மொழி தேவை என அறிஞர் அண்ணா குறிப்பிட்டார். மத்திய அரசாங்கத்திடம் அதற்கான நிதியை பெற வேண்டும் என்று சொன்னால் மூன்றாவது மொழியை கற்றுத் தர வேண்டும். அது ஹிந்தி மொழி என்பது அல்ல. ஹிந்தி மொழி மட்டுமே கட்டாயம் என்றால் அதனை நாங்களும் எதிர்ப்போம். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் அவர் அம்பு மட்டும் தான். அதனை எய்தவர்கள் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதற்காக வழக்கை இழுத்தடிக்க பார்க்கிறார்கள். உச்ச நீதிமன்றம் விடுக்கும் கண்டனங்களை திமுக அரசு ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதைப் போல இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் காணமுடியாது. இத்தகைய மோசமான ஆட்சியை நாம் பார்த்ததில்லை. இதற்கு வரும் 2026 சட்டமன்ற பொது தேர்தலின்போது தமிழக மக்கள் தகுந்த பதில் தருவார்கள் என்றார்.