திருச்சி மாநகராட்சி 27 வது வார்டுக்கு உட்பட்ட பாலன் நகரில் கடந்த 70 ஆண்டுகளாக 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு அருகே மாருதி மருத்துவமனை இயங்கி வருகிறது. தற்போது இந்த மருத்துவமனையை விரிவு படுத்துவதற்காக அருகில் உள்ள அனைத்து இடங்களையும் மருத்துவமனை நிர்வாகம் கையகப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மருத்துவமனை அருகே ஒரு சிறிய பகுதியான பாலன் நகர் பகுதியை கையகப்படுத்தும் போது அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் தர மறுத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களாக இப்பகுதியில் மின்சார வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி அனைத்தையுமே மாவட்ட நிர்வாக அதிகாரிகள் துண்டித்துள்ளனர் என கூறப்படுகிறது. இது குறித்து மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் பாலன் நகர் பொது மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி இன்று தெருமுனையில் கருப்பு கொடி கட்டி, குடும்பத்துடன் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பிளக்ஸ் போர்டு வைத்து காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களுக்கு உடனடியாக குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கோரிக்கை நிறைவேற்றி தரப்படும் என உறுதியளித்து, குடிநீர் வழங்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ளும்படி மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான பணிகளையும், மின்சார வாரியம் மூலமாக மின்சாரம் வழங்கும் பணிகளையும் மேற்கொண்டனர்.
மேயர் சம்பவ இடத்திற்கு வந்ததை அறிந்த பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜசேகர் மற்றும் நிர்வாகிகள், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் பொழுது கடந்த மூன்று மாதங்களாக எவ்வித நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்த மாநகராட்சி மேயர் திடீரென இன்று பொது மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற எப்படி பேச்சு வார்த்தை நடத்தலாம் எனக் போலீசாரிடம் கேள்வி எழுப்பினர் அப்போது அங்கு வந்த திமுக நிர்வாகிகள் பாஜகவினரோடு திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு துணை இராணுவத்தினர் மற்றும் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து பாஜகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். மேலும் குடிநீர் இணைப்பு மற்றும் மின்சாரம் வழங்கும் பணியில் ஊழிய ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது