தமிழக நகராட்சித்துறை அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன், இளைய சகோதரர் மணிவண்ணன் மற்றும் அமைச்சர் கே.என் நேருவின் மகன் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கே.என் அருண் நேருக்கு சொந்தமான சென்னையில் உள்ள டி வி ஹெச் தொடர்புடைய நிறுவனத்தில் சென்னையில் ஐந்து இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி தில்லைநகர் ஐந்தாவது குறுக்கு தெரு பகுதியில் உள்ள அமைச்சர் கே.என் நேருவின் இல்லம், 10 வது தெருவில் உள்ள நேருவின் சகோதரர் ராமஜெயம் இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போன்று கோவை மாவட்டம் மசக்கி பாளையம் பகுதியில் உள்ள அமைச்சர் கே என் நேருவின் இளைய சகோதரர் மணிவண்ணன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎஃப் போலீசார் மற்றும் தமிழக போலீசார் என பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், கணக்கில் பல ஆவணங்கள் காட்டப்படாத வந்த தகவல் அடிப்படையில் கமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை பதிவு எண் கொண்ட காரில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை செய்து வருகின்றனர். தற்போது அமலாக்கத் துறையினரால் சோதனை நடத்தப்பட்டு வரும் வீடுகளில் பத்துக்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். தற்போது தில்லை நகரில் கே.என். நேரு வீட்டில் மாமன்ற உறுப்பினர்கள் முத்து செல்வம் காஜாமலை விஜய் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழக காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.