திருச்சி பீமநகர் கீழக்கொசத்தெரு அரசமர சோலை பகுதியில் கடந்த 100 வருடமாக எழுந்தருளி அருள்பாலித்து வரும் காவல் தெய்வமான ஸ்ரீ சங்கிலி ஆண்டவர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீ சங்கிலி ஆண்டவர், ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ காவேரி காளியம்மன், ஸ்ரீ நாகம்மாள், ஸ்ரீ மாசி பெரியண்ண சுவாமி மற்றும் ஸ்ரீ மதுரை வீரன் ஆகிய தெய்வங்களுக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்ரீ சங்கிலி ஆண்டவர் சுவாமி கோவில் அருகே அரசு புறம்போக்கு இடத்தில் தனிநபர் ஒருவர் தன் வீட்டின் கொல்லைப்புற பகுதியை மட்டும் ஆக்கிரமித்து அரசு புறம்போக்கு இடத்தில் மேற்கூரையுடன் தனி அறை கட்டி பயன்படுத்தி வந்தார். இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் திருச்சி மேற்கு தாசில்தார் ரமேஷ் தலைமையில் அதிகாரிகள் இன்று காலை அப்பகுதிக்கு வந்து அரசு புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமிப்பு செய்த வீட்டின் பின் பகுதியை மட்டும் இடித்து தள்ளினர்.