திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு பிறகு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இன்று அளித்தனர். அதன்படி திருச்சி துறையூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி வேல்முருகன் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருச்சி துறையூர் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருகிறேன். நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தமிழ்நாடு இந்து அறநிலைத்துறை ஆகிய அலுவலகங்களில் துறையூர் அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவில் நிலங்களை தனி நபர் பெயருக்கு பட்டா மாற்றம் செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை மனு அளித்தேன். அதில் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம், உப்பிலியபுரம் கிராமத்தில் தெற்கில் உள்ள சர்வே எண்.116-ல் விஸ்தீரனம் 9.35 ஏ.செ உள்ள நிலம் மாராடி, அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயிலுக்கு பாத்தியப்பட்டுள்ள நிலமாக திருக்கோயில் சொத்துப்பதிவேட்டில் பதிவாகியிருந்தது.
மேலும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை 34-ன்படி யாதொரு திருக்கோயில் சொத்துக்களை பந்தக பராதீனம் செய்ய திருக்கோயில் நிர்வாகிகளுக்கு உரிமை ஏதுமில்லை. அவ்வாறான பந்தக பராதீனம் திருக்கோயில் நிர்வாகிகளால் செய்யப்படாத நிலையில் தற்போது நிலவுடமை மேம்பாட்டு திட்டத்தில் தயாரிக்கப்பட்ட அ-பதிவேட்டின் படி கணினி சிட்டாவில் உள்ளதின் படி தனிநபர் பெயரில் திருக்கோயில் நிர்வாகம் அறியாத வகையில் தனிநபர் பெயர்களில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது செல்லத்தக்கதல்ல.
எனவே இத்திருக்கோயிலுக்கு சொந்தமான புன்செய் நிலம் திருக்கோயில் சொத்துப்பதிவேட்டில் சர்வே எண்.116-ல் விஸ்தீரனம் 9.35 ஏ.செ உள்ளதென குறிப்பிடப்பட்டுள்ளது. 1977-ல் திருக்கோயில் சொத்துப் பதிவேட்டிலும் சர்வே எண்116-ல் விஸ்தீரனம் 9.35 ஏ.செ உள்ளதென அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது கணினிசிட்டாவில் தனிநபர் 4 பேரின் பெயருக்கு பதிவாகியுள்ளது. உடனடியாக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து தனிநபர் பெயரில் பட்டா மாற்றம் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவில் நிலங்களை மீட்டெடுக்க வேண்டும் என மனு அளித்தார்.