சமயபுரம் அருகே உள்ள மாணவி ஒருவர் 9-ம் வகுப்பு வரை படித்துள்ளார். பின்னர் கொரோனா காலத்தில் இடை நின்றவர் மீண்டும் பள்ளிக்கு செல்லவில்லை. இதற்கிடையே மாணவியின் தந்தை இறந்து விட்டார். அதன் பின்னர் தாய் மகளை பள்ளியில் சேர்க்கும் முடிவை மறுபரிசீலனை செய்யவில்லை.தாய் கூலி வேலைக்கு செல்ல மகள் வீட்டு வேலைகளை கவனித்து வந்தார். இந்த நிலையில் தனது தோழிகள் பள்ளிக்கு செல்வதை கண்டு மாணவிகளுக்கு பள்ளிக்கூடம் செல்லும் ஆசை துளிர்விட்டது.
அதைத்தொடர்ந்து தனது ஆவலை தாயாரிடம் தெரிவித்தார். அதற்கு தாய் ஒப்புக் கொள்ளவில்லை. பள்ளி படிப்பை நிறுத்தி 4 வருடம் ஆகிவிட்டது. இனிமேல் நீ படித்து எதுவும் ஆகப் போவதில்லை. வழக்க ம்போல் வீட்டு வேலைகளை பார்த்துக்கொள். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் திருமணம் செய்து வைக்கிறேன் என கூறியதாக தெரிகிறது. இதனால் மிகுந்த மன வேதனைக்கு ஆளான மாணவி தாயார் வேலைக்கு சென்ற பின் வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து தின்று விட்டார். பின்னர் மாலையில் வீடு திரும்பிய தாய், மகள்வாயில் நுரை தள்ளி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மாணவியை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் மாணவி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாப மாக இறந்தார். இது குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.