திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவாசி பேருந்து நிறுத்தத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பங்களை ஊராட்சி நிர்வாகம் எவ்வித அறிவிப்பும் இன்றி அகற்றியதாக கூறி தி.மு.க, ம.தி.மு.கவினர் திருவாசி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து ஊராட்சிமன்ற தலைவி பானுமுருகேசன் கூறியபோது:- திருவாசி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பேரில் பேருந்து வழித்தடங்களை ஆய்வு செய்த போக்குவரத்துத்துறை அதிகாரிகள் திருவாசி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கட்சி கொடி கம்பங்கள், கோவில் பெயர் பலகைகள் பேருந்து செல்ல இடையூராக இருப்பதால் அதனை இடமாற்றம் செய்யவேண்டும். சாலை மிகவும் பள்ளமாக இருப்பதால் அதனை சீர் செய்ய வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திடம் வலியுருத்தினர். இதனைத்தொடர்ந்து ஊராட்சிமன்ற கூட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்‌‌. பேருந்து வசதிக்கு இடையூராக இருக்கும் கொடிக்கம்பம் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ மற்றும் சம்பந்தப்பட்ட கட்சி முக்கிய பிரமுகர்களுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் கொடி கம்பங்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த மனுமீது நடவடிக்கை எடுக்கும் வகையில் வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பேருந்து வழித்தடத்திற்கு இடையூராக இருந்த கொடி கம்பங்களை அகற்றினர் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *