திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட, கம்பரசம் பேட்டை பகுதியில், குடிநீர் தட்டுப்பாடு கடந்த சில மாதங்களாக ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி அலுவலர்களுக்கு புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தையும், மக்கள் பிரச்சனைகளில் அக்கறை கொள்ளாத தமிழக அரசையும் கண்டித்தும் இன்று திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கம்பரசம்பேட்டை பகுதியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முறையாக குடிநீர் வழங்க கோரி, திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தையும், தமிழக அரசையும் கண்டித்து 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 5 -கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை பொதுமக்கள் தற்காலிகமாக கைவிட்டனர்.
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இல்லை என்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தால் திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றதால் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.