திருச்சி கொட்டப்பட்டு 47 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக சாக்கடை கட்டும் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை சாக்கடை கட்டுமான பணிக்காக ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டிய போது தரைவழியாக சென்ற குடிநீர் குழாய் பைப் உடைந்து தண்ணீர் வெளியேறியது. உடனே பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் குடிநீர் பைப் பகுதியை தற்காலிகமாக அடைத்தனர். இது குறித்து உடனடியாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளும் தகவல் தெரிவித்தனர்.
ஆனால் சனி ஞாயிறு திங்கள் ஆகிய மூன்று நாட்கள் ஆகியும் தற்போது வரை குடிநீர் பைப் சரி செய்யப்படாததால் அப்பகுதியில் குடிநீர் இல்லாததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்கு சாக்கடை கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து உடைந்த குடிநீர் பைப்பு சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்:- திருச்சி மாநகராட்சி 47வது வார்டு கவுன்சிலராக இருந்தவர் செந்தில்நாதன் இவர் இப்பகுதியில் கவுன்சிலராக இருந்தபோது மக்கள் பிரச்சனைகளை நேரில் சென்று கேட்டு அறிந்து உடனுக்குடன் நிவர்த்தி செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த திருச்சி பாராளுமன்ற வேட்பாளராக களம் இறங்கியதால் தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது இந்த வார்டு பகுதியில் கவுன்சிலர் இல்லாததால் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியப் போக்காக மக்களின் குறைகளை கேட்டறிந்து செயல்படுத்துவதில் காலம் தாழ்த்தி வருகின்றனர். அதிலும் கடந்த மூன்று நாட்களாக இப்பகுதியில் குடிநீர் வராமல் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர் இது குறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரியிடம் புகார் அளித்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படாததால் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடலாம் என முடிவெடுத்தோம் ஆனால் அதிகாரிகள் தற்போது வந்து குடிநீர் பைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதுபோன்ற பணிகளை மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் முன்பே அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும் என மனவேதனையுடன் தெரிவித்தனர்.