நடைபயணங்களில் நான் அரசியல் கட்சிகளை விமர்சித்தது கிடையாது ஆனால் வரும் ஜனவரி 2-ந் தேதி திருச்சியில் தொடங்க உள்ள நடைபயணத்தில்  சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு திராவிட மாடல் ஆட்சி தொடர ஆதரவு தர வேண்டும் என பொதுமக்களிடம் வேண்டுகோள் வைக்க உள்ளேன் என்று வைகோ கூறினார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போதை பொருள்களுக்கு எதிராக வரும் ஜனவரி 2 – ந் தேதி முதல் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். திருச்சியிலிருந்து தொடங்க உள்ள அந்த நடைபயணத்திற்கு தொண்டர்களை தேர்வு செய்யும் நிகழ்ச்சி திருச்சியில் இன்று நடைபெற்றது. வைகோ தொண்டர்களை நேர்காணல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது:- போதை பொருளுக்கு எதிராக நான் மேற்கொள்ள உள்ள நடைபயணம் 8-வது நடைபயணம். ஏற்கனவே மதுவை எதிர்த்து 1200 கி.மீ நடந்துள்ளேன். அப்போது பலர் குறிப்பாக பெண்கள் ஆதரவு தெரிவித்தார்கள். எங்கள் ஊரில் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கினோம். அதிமுக அரசு அதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்றது. ஆனால் அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது இன்று வரை எங்கள் ஊரில் டாஸ்மாக் கிடையாது.

டாஸ்மாக்கை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. இன்று இளைஞர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள். கல்லூரி வரை வந்த போதை பொருள் இன்று பள்ளி வரை வந்து விட்டது. ஒவ்வொரு நடைபயணமும் தமிழகத்தின் வாழ்வாதாரத்தை காக்க, ஜாதி மத மோதல்கள் இல்லாத சமூகத்தை உருவாக்க என 7000 கி.மீ வரை நடந்துள்ளேன் இளம் நெஞ்சுகளில் ஜாதி, மத கருத்துக்களை விதைக்கிறார்கள். இதனால் மாணவர்களிடம் மோதல்கள் நடைபெறுகிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும். நடைபயணங்களில் நான் அரசியல் கட்சிகளை விமர்சித்தது கிடையாது ஆனால் வரும் ஜனவரி 2-ந் தேதி திருச்சியில் தொடங்க உள்ள நடைபயணத்தில்  சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு திராவிட மாடல் ஆட்சி தொடர ஆதரவு தர வேண்டும் என பொதுமக்களிடம் வேண்டுகோள் வைக்க உள்ளேன். டாஸ்மாக்கை முழுமையாக ஒழிக்க முடியவில்லை, ஆனால் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை கடுமையான நடவடிக்கைகள் மூலம் ஒழிக்க முடியும் இளைஞர்களை சீரழிக்கும் போதை பொருளை ஒழிக்கவே நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன். அரசு இரும்பு கரம் கொண்டு போதை பொருளை ஒழிக்க வேண்டும் அது அரசின் தலையாய கடமை. எஸ்.ஐ.ஆர் என்பது மிகப்பெரிய மோசடி.இருக்கும் வாக்காளர்களை நீக்கி விட்டு வெளிமாநில வாக்காளர்களை சேர்க்கவே இந்த நடவடிக்கை. எஸ்.ஐ.ஆருக்கு எதிராக நாங்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

வரும் வெள்ளி அல்லது திங்கள் கிழமை வாதாட எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அப்போது நாங்கள் எங்கள் வாதத்தை முன் வைப்போம். என் பாட்டனார் சேர்த்த கோடிக்கணக்கான சொத்துக்களை பொது வாழ்வில் வந்த பின் இழந்தேன். அதை இழப்பாக நான் கருதவில்லை. என் நாணயம் குறித்து எதிர்கட்சிகள் கூட வைக்காத குற்றச்சாட்டை மல்லை சத்யா வைத்துள்ளார் ஜமுக்காளத்தில் வடிக்கட்டிய பொய்யை கூறி எங்களை கொச்சைப்படுத்த முடியாது. நான் ஒரு இலக்கை நோக்கி பயணிக்கிறேன் அந்த பயணத்தில் நரி ஊளையிட்டால் அதற்கு நின்று பதில் கூற முடியாது . இவ்வாறு வைகோ கூறினார். இந்நிகழ்வில் அதிமுக துணை பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் டிடிசி சேரன்,நிர்வாகிகள் ராஜன் இளமுருகு ,ஆபீஸ் முத்துக்குமார்,பகுதிச் செயலாளர்கள் ஜங்ஷன் செல்லத்துரை, ஆசிரியர் முருகன் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்