திருச்சி தில்லை நகர் 11-வது கிராஸ் மேற்கு பகுதியில் எக்ஸ்ட்ரீம் டாட்டு ஸ்டூடியோ செயல்பட்டு வருகிறது. இந்த ஸ்டூடியோவின் உரிமையாளர் முத்துக்குமார். இவர் வரும் 21 ஆம் தேதி உலக தாய்மொழி தினம் கடைபிடிக்கப் படுவதை முன்னிட்டு தாய்மொழியாம் தமிழ் மொழியை பெருமை படுத்தும் விதமாக, “தமிழ்” வார்த்தையை 500 பேருக்கு டாட்டு போடும் உலக சாதனை நிகழ்ச்சி நடத்த உள்ளதாக அறிவித்து இருந்தார். அந்த வகையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் 500 பேருக்கு டாட்டூ போடும் உலக சாதனை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் ஆண்கள், இளைஞர்கள் உள்பட பொது மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தமிழ் வார்த்தையை டாட்டூவாக வரைந்து கொண்டனர். இந்த உலக சாதனை நிகழ்ச்சி இந்தியா புக் ஆஃப் வேர்ல்டு ரெகார்ட் புத்தகத்தில் இடம் பெற உள்ளது. இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் வரும் மார்ச் 1 முதல் 31 வரை பங்கேற்ற அனைவருக்கும் மற்றும் உடன் வரும் ஒரு நபருக்கும் விருப்பமான டாட்டூ டிசைன் ஒரு இன்ச் 99 ரூபாய்க்கு வரைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து எக்ஸ்ட்ரீம் டாட்டூ ஸ்டுடியோ உரிமையாளர் முத்துகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்….
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழ் மக்களுக்கு இரண்டு இன்ச் அளவிலான தமிழ் வார்த்தையை இலவசமாக போடும் உலக சாதனை நிகழ்ச்சி இன்று நடத்தி வருகிறோம். உலக அரங்கில் தாய் மொழிக்கு மரியாதை செலுத்தி எந்த ஒரு உலக சாதனை நிகழ்ச்சியும் நடத்தியது இல்லை. டாட்டூவில் உலக சாதனை நிகழ்ச்சி இன்றுதான் முதல் முறையாக நடந்துள்ளது. இந்நிகழ்வை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி இரவு 12 மணிக்குள் முடிக்க உள்ளோம். இந்தியா புக் ஆஃப் வேர்ல்டு ரெகார்ட் புத்தகத்தில் இந்த சாதனை இடம் பெற உள்ளது. 700 நபர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.