தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கபடுள்ளது. இந்நிலையில் திருச்சி மாநகர் முழுவதும் காலை முதல் வெயிலின் தாக்கம் கடந்த மூன்று நாளாக அதிகளவில் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை 6 மணி முதல் மிதமான குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. இதைத் தொடர்ந்து 8 மணிக்கு மாநகரில் மழை பெய்ய தொடங்கியது.
குறிப்பாக சத்திரம் பேருந்து நிலையம் , மத்திய பேருந்து நிலையம், டிவிஎஸ் டோல்கேட், விமான நிலையம், சுப்பிரமணியபுரம் பகுதிகளில் ஒரு மணி நேரமாக விடாமல் மழை பெய்தது. இதனால் காலை முதல் வெயிலின் தாக்கத்தை மட்டுமே அனுபவித்த மக்கள் திடீரென்று மழை பெய்ததால் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். திருச்சி மாநகரமே குளிரும் அளவிற்கு மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.