தமிழ்நாடு அரசு தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். இதற்கு எதிராக மேல் முறையீடு செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில்
நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் கையில் தீ பந்தம் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க திருச்சி மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மணிமாறன் வரவேற்புரை ஆற்றினார். கோட்டத் துணைத் தலைவர்கள் மலர்மன்னன், கோவிந்தராஜன், கோட்ட இணை செயலாளர் சௌந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சங்க மாநிலத் துணைத் தலைவர் மகேந்திரன் கண்டன உரையாற்றினார். முடிவில் மாவட்ட பொருளாளர் பிரான்சிஸ் நன்றி கூறினார்.