இந்திய இரயில்வே இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இது உலகிலுள்ள மிகப்பெரிய தொடர்வண்டி வலையமைப்புகளில் ஒன்றாகும். இந்திய இரயில்வேயில் ஆண்டுக்கு 500கோடி மக்கள் பயணிக்கின்றனர். ஆண்டுக்கு 35 கோடி டன் சரக்குள் கையாளப்படுகிறது. சுமார்12.54 லட்சம் ஊழியர்கள் பல்வேறு பிரிவுகளில் இதில் பணிபுரிகின்றனர். இந்தியாவிலுள்ள இருப்புப் பாதையின் மொத்த நீளம் 67,956 கிலோமீட்டர்களாகும். இது தினமும் 14,444 ரயில்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் விபத்து ஏற்படும் போது அவற்றின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த கூட்டுப் பயிற்சி, தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தமிழக தீயணைப்பு வீரர்கள், மருத்துவ குழுவினர் இணைந்து ரயில்வே அதிகாரிகளால் இன்று காலை திருச்சி குட்செட் யார்டில் நடத்தப்பட்டது. அங்கு ரயில்கள் விபத்து ஏற்பட்டது போல செயற்கையாக வடிவமைக்கப்பட்டு இந்த பயிற்சி ஒத்திகை நடைபெற்றது.
ரயில் விபத்துகளின் போது மீட்பு நடவடிக்கை குறித்து பாதுகாப்புக் குழுவினர் செயல்விளக்கம் நடத்தி காட்டினர். இதற்காக ஒரு ஏசி மற்றும் 2பொது ரயில் பெட்டிகள் கவிழ்க்கப்பட்டும் ஒரு பெட்டியின் மீது மற்றொரு ரயில் பெட்டி ஏற்றப்பட்டது. இதை விபத்தாகக் கருதி திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து அபாய சங்கு ஒலிக்கப்பட்டது. உடனே தளவாட பொருட்கள், அவசர சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள், கிரேன் உள்ளிட்டவை குட்ஷெட்டு யார்டுக்கு கொண்டுவரப்பட்டது. திருச்சி ரெயில்வே கோட்ட முதுநிலை பாதுகாப்பு பிரிவு அதிகாரி ஸ்ரீதர் தலைமையில் ரயில்வே துறையினர், ரெயில்வே பாதுகாப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், மருத்துவ துறையினர், தொழில்நுட்ப துறையினர், காவல் துறையினர் என 250க்கும் மேற்பட்டோர் இந்த ஒத்திகையில் கலந்து கொண்டனர்.
விபத்தில் சிக்கிய நபர்கள் மீட்பது, உடனடியாக முதலுதவி கொடுக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வது குறித்து ஒத்திகை தத்துரூபமாக செய்து காட்டப்பட்டது. ரயில் விபத்து நடைபெறும் இடத்தை போலவே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு ஒத்திகை நடத்தப்பட்டது. தமிழ்நாட்டிலோ, திருச்சி ரெயில்வே கோட்டத்திலோ ரயில் விபத்துகள் நல்வாய்ப்பாக எதுவும் நடைபெறவில்லை. ஒரு வேளை நடந்தால் உடனடியாக செய்ய வேண்டிய மீட்பு பணிகளுக்கான பயிற்சியாகவும், ஒத்திகையாகவுமே இது நடத்தப்பட்டது என திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் தெரிவித்தார்.