தமிழ் திரையுலகின் மாபெரும் நடிகரான நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு திருச்சியில் சிலை அமைக்க 2009ஆம் ஆண்டு, திமுக ஆட்சி காலத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருச்சி மாநகராட்சி எல்லைக்குள் உள்ள பாலக்கரை ரவுண்டானா பகுதியில், 2011ஆம் ஆண்டு 9 அடி உயர வெண்கல சிலை நிறுவப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, அந்த சிலை இதுவரை பொதுமக்களுக்கு திறக்கப்படாமல் இருந்தது. இதனை தொடர்ந்து, சிவாஜி ரசிகர்கள் தொடர்ந்து சிலையை திறக்கக் கோரி வலியுறுத்தினர். இது தொடர்பாக, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியதற்கு, அமைச்சர் கே. என். நேரு பதிலளிக்கையில், “சிலை விரைவில் திறக்கப்படும்” என தெரிவித்திருந்தார்.
பாலக்கரை பகுதியில் சிலையை திறப்பதில் சில சிக்கல்கள் ஏற்பட்டதால், அதனை புத்தூர் நான்கு ரோடு பகுதியில் மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், இன்று நடிகர் திலகத்தின் வெண்கல சிலையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைதார் இந்த நிகழ்ச்சியில் சிவாஜியின் குடும்பத்தினர் நடிகர் பிரபு மற்றும், அவரது மூத்த சகோதரர் ராம்குமார் மற்றும் பிரபுவின் மகன் நடிகர் விக்ரம் பிரபு ஆகியோர் பங்கேற்றனர். மற்றும் அமைச்சர்கள் கே. என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மற்றும் மாநிலங்கள் அவை உறுப்பினர் சிவா, ஆகியோரும் பங்கேற்றனர்.