தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைப்பதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஜூன் 12-ம் தேதி 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் ஜூன் 14ஆம் தேதி 1-முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.
அதன்படி தமிழகத்தில் இன்று முதல் 6-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருச்சி சேவா சங்கம் பெண்கள் பள்ளி இன்று திறக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து மாணவிகள் தங்கள் பெற்றோருடன் ஆர்வமாக பள்ளிக்கு வந்தனர் மேலும் விடுதியில் தங்கி பயிலும் மாணவிகள் தங்கள் உடமையுடன் பள்ளிக்கு வந்தனர்.
முன்னதாக பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவிகளுக்கு பூ மற்றும் இனிப்புகள் வழங்கி முன்னாள் மாணவிகள் ஆசிரியர்கள் வரவேற்றனர். முதல் நாளிலேயே மாணவ மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வகுப்பு ஆசிரியர் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது.