திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் சிறப்பு ஆய்வு முகாம் கூத்தூரில் உள்ள விக்னேஷ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்த ஆய்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் முன்னிலையில் 168 பள்ளிகளைச் சேர்ந்த 816 வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பள்ளி வாகனங்களில் ஏறி ஆய்வு மேற்கொண்டதில் சோதனையில் வாகனங்களில் உள்ள அவசரகால வெளியேறும் வழியை திறக்க சிரமப்பட்டதாலும், சுத்தியல் இல்லாததாலும் ஆட்சியர் வாகன ஓட்டுநர் மற்றும் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். ஒரு சில பள்ளி வாகனங்களில் அவசரகால மருத்துவ பெட்டகம் இல்லாமல் இருந்ததை கண்டு வாகன ஓட்டுனர்களுக்கு உடனே அதனை வைக்குமாறு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது 153 பள்ளி வாகனங்கள் தகுதி சான்றிதழ் இல்லாமல் இயக்கிவந்தது கண்டறியப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டதுடன் தகுதி சான்றிதழ் புதுப்பித்துக் கொள்ள காலக்கெடு விடுக்கப்பட்டது. அவ்வாறு உரிய காலத்தில் தகுதி சான்றிதழ் பெறாத வாகனங்கள் உரிமத்தை ரத்து செய்யவும் ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும் பள்ளி இயக்கும் வாகன ஓட்டுனர்களுக்கு வாகனத்தில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்த அறிவுரைகளை வழங்கினார். முன்னதாக தீ தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி தீயணைப்பு துறையினரால் நடத்தப்பட்டது இந்நிகழ்வில் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி;, இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் குமார், போக்குவரத்து வாகன ஆய்வாளர்கள், தனியார் பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.