திருச்சியில் கடந்த 13ம் தேதி காந்தி மார்க்கெட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பொன்நகர், மணிமண்டப சாலையில் பழம் வியாபாரம் செய்யும் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் ரூ.4000/- பறித்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் பிள்ளைமா நகர், எடத்தெருவை சேர்ந்த அன்சாரி 24 என்பவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விசாரணையில் ரவுடி அன்சாரி அவரது நண்பர்களுடன் சேர்ந்து இளைய சமுதாயத்தை அழிக்கும் போதை மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்பவர் எனவும், காந்திமார்க்கெட் காவல்நிலையத்தில் அடிதடி, வழிப்பறி போன்ற 8 வழக்குகளும், பாலக்கரை காவல்நிலையத்தில் ஒரு அடிதடி வழக்கும், தில்லைநகர் காவல்நிலையத்தில் போதை மாத்திரை விற்பனை, வழிபறி செய்ததாக 2 வழக்குகள் உட்பட 12 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
எனவே ரவுடி அன்சாரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கொடுங்குற்றப்பிரிவு ஆய்வாளர் (பொறுப்பு) காந்திமார்க்கெட் காவல்நிலையம் அவர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் .சத்திய பிரியா ரவுடியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரியின் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.