திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சர் ஏ.டி. பன்னீர்செல்வம், தியாகராஜ பாகவதர் ஆகியோருக்கு மணிமண்டபங்கள் கட்டப்பட்டது. இந்த கட்டுமான பணிகள் முடிந்து 2 ஆண்டுகள் கடந்த பின்னரும் இதுவரை திறக்கப் படவில்லை. இந்த நிலையில் மணி மண்டப வளாகத்தினை சமூக விரோதிகள் அசுத்தம் செய்து வருகின்றனர் அதைத்தொடர்ந்து கே.கே. செல்வகுமார் தலைமையிலான தமிழர் தேசம் கட்சி மற்றும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் இன்று மணிமண்டப வளாகத்தை தூய்மைப்படுத்த போவதாக அறிவித்தனர். இதை எடுத்து முன்னெச்சரிக்கையாக ஏராளமான காவல் துறையினர் மணிமண்டப வளாக முன்பு குவிக்கப்பட்டனர்.
பின்னர் தமிழர் தேசம் கட்சியின் மாநில செயலாளர் மகிடீஸ்வரன், தலைமை ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன், கொள்கை பரப்புச் செயலாளர் தளவாய் ராஜேஷ் மற்றும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மணிமண்டப வளாகத்தில் திரண்டு வந்தனர். அப்போது மாநகராட்சி டிராக்டர் மூலமாக மணி மண்டப வளாகத்தை அவசர அவசரமாக சுத்தம் செய்வதை கண்டு வியப்படைந்தனர். அப்போது போராட்டக்காரர்களிடம் மாநகராட்சி நிர்வாகமே மணிமண்டப வளாகத்தை சுத்தம் செய்து விட்டது. நீங்கள் கலைந்து செல்லுங்கள் என கூறினர்.
அதன் பின்னர் போராட்டக்காரர்கள் மணி மண்டபம் முன்பு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் உள்பட 3 தலைவர்களின் மணிமண்டபங்களை உடனடியாக திறக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மணி மண்ட வளாகத்தை சுத்தம் செய்து நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். மேலும் மணி மண்டபத்தை உடனடியாக திறக்காவிட்டால் தமிழர் தேசம் கட்சி சார்பில் மணிமண்டபத்தை தடையை மீறி திறக்கப்படும் என அறிவித்துவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக பஸ் நிலையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.