திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மு.மதிவாணன் , துர்கா தேவி, ஜெய நிர்மலா, விஜயலட்சுமி கண்ணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தை தொடங்கி வைத்த மேயர் பேசும் போது, திருச்சி மாநகராட்சியில் 4 கோட்டங்களிலும் நாய்கள் பிடிப்பதற்கு ஒரு வாகனம் மட்டுமே இருந்தது. அதனை நான்காக உயர்த்தப்பட்டது. இந்த மாநகராட்சியில் 25 ஆயிரம் நாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது அதில் கிட்டத்தட்ட 11 ஆயிரத்து 929 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 380 மாடுகள் பிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது திருச்சி மாநகராட்சியில் 858 கிலோமீட்டர் தூரத்திற்கு பாதாள சாக்கடை திட்டம் உள்ளது. அதில் 17 கிலோமீட்டர் தவிர்த்து அனைத்து பகுதிகளிலும் பணிகள் முடிக்கப்பட்டு சாலைகள் போடப்பட்டுள்ளது இதற்கு நமக்கு ஒத்துழைப்பு வழங்கிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
அதனைத் தொடர்ந்து அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி பேசுகையில் புதுக்கோட்டை ரோடு பகுதியில் ஒரு பக்கத்தில் மின்விளக்கு போடப்பட்டு உள்ளது. மறுபக்கத்தில் மின் விளக்குகள் இல்லாத காரணத்தால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. பாதாள சாக்கடை திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது அதனை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார். அப்பொழுது மேயர் அன்பழகன் குறுக்கிட்டு உங்கள் ஆட்சியில் திட்டத்தை கொண்டு வந்து விட்டு மற்ற மாநகராட்சிக்குநிதி ஒதுக்கீடு செய்து விட்டு திருச்சி மாநகராட்சிக்கு சாலைப் பணிகளுக்குமற்றும் நிதி ஒதுக்காமல் விட்டது ஏன்? அம்பிகாபதி (அதிமுக) திட்டத்தை தற்பொழுது செயல்படுத்துகிற நிலையில் உங்கள் அரசு தானே இருக்கிறது. மேயர் அன்பழகன் : அதிமுகவின் 10 ஆண்டுகால மாநகராட்சியில் பொதுமக்களுக்கு எந்தவித திட்டமும் செயல்படுத்தவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் திமுக வார்டுகளை பாரபட்சமாக பார்த்தார்கள். ஆனால் திமுக ஆட்சியில் அனைத்து வார்டு கவுன்சிலருக்கும் சமமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து பணிகளும் விரைவாக நடைபெறுகிறது. அப்பொழுது மாறி மாறி திமுக அதிமுக கவுன்சிலர்கள் கூச்சல் போட்டனர் இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.