திருச்சி மாநகரில் கல்லூரிகள் , பள்ளிகள் , மத்திய பேருந்து நிலைய பகுதிகளில் ஒரு சில சமூக விரோதிகளால் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகள் விற்கப்படுவதாகவும் மாணவர்களின் எதிர்காலம் சீரழிவதாகவும் கிடைக்க பெற்ற தகவலின்பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தனிப்படை போலீசாருக்கு மேற்படி போதை மாத்திரை மற்றும் போதை ஊசி விற்கும் சமூக விரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பேரில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்க்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் திருச்சி மாநகரில் மத்திய பேருந்து நிலையம் , பாலக்கரை , அரியமங்கலம் மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய பகுதிகளில் கண்காணித்து அரசு அனுமதியோ , உரிய அரசு சான்றிதழோ இல்லாமலும் , மருத்துவரின் ஆலோசனை கடிதம் இல்லாமலும் சட்ட விரோதமாக போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகளை விற்பனை செய்த ஸ்ரீரங்கம் அரவிந்த , வடக்கு காட்டூர் ஷெப்ரின் ஆகியோரை அரியமங்கலம் பகுதியில் கைது செய்து அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 1250 Gureng மாத்திரைகள் மற்றும் 80 போதை மருந்து பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர் , மேலும் கண்டோன்மெண்ட் முடுக்குபட்டியை சேர்ந்த நாகராஜ் மற்றும் கார்த்திக்ராஜா , கல்லுகுழியை சேர்ந்த ஜெயராமன் , கோகுல் , செங்குளம் காலனி பிரவின்ராஜ் ஆகியோர்களை முடுக்குப்பட்டி பகுதியில் கைது செய்து அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 200 போதை மாத்திரைகளையும் கைப்பற்றியும் , மேற்படி 7 குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.