வேளாண் விளை பொருள்களுக்கு மத்திய அரசு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடுமுழுவதும் போராட்டங்களை நடத்திய விவசாயிகள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். மேலும் கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை உடனே விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தின் போது விவசாயிகள் அரை நிர்வாணமாக, மனித மண்டை ஓடுகளை கையில் ஏந்தி, வாழைப்பழங்களை வாயில் வைத்து மணி அடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில துணைத்தலைவர் மேகராஜன், நிர்வாகிகள் ரகு, பிரேம்குமார் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.