திருச்சி மாவட்ட கிரிமினல் கோர்ட் அட்வகேட்ஸ் அசோசியேஷனின் 46 ஆவது ஆண்டு விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சீனிவாசா மகாலில் இன்று நடைபெற்றது. இவ்விழால் சங்க செயலாளர் வழக்கறிஞர் வெங்கட் வரவேற்புரையாற்றினார். தலைவர் வழக்கறிஞர்கள் சுரேஷ் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிர்மல் குமார், முரளி சங்கர், ஸ்ரீமதி மற்றும் திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி பாபு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பாதியிலேயே, உணவு பரிமாறும் இடத்தில் வழக்கறிஞர்கள் சிலர் சாப்பிடுவதற்காக சென்றனர். இதனை அறிந்து, அங்கு வந்த வழக்கறிஞர்கள் சங்க பொருளாளர் வழக்கறிஞர்கள் கிஷோர் குமார் அவர்களிடம் சிறிது நேரம் காத்திருங்கள் நிகழ்ச்சி இன்னும் முடியவில்லை மதிப்புக்குரிய நீதிபதிகள் சிறப்புரை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது இங்கு உணவு பரிமாறப்பட்டால் உள்ளே அமர்ந்து இருப்பவர்களும், உணவு உண்ண வெளியே வந்து விடுவார்கள். இதனால் நீதிபதிகள் பேசும்போது, இருக்கைகள் காலியாக இருக்கும் ஆகவே மதிப்புக்குரிய நீதிபதிகள் பேசி முடித்ததும் உணவு பரிமாறப்படும் என தெரிவித்தார். அப்போது அங்கு இருந்த 10-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சங்க பொருளாளர் வழக்கறிஞர்கள் கிஷோர் குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் அவரை தரை குறைவாக பேசி அங்கிருந்த சாப்பாட்டு பாத்திரங்களை தள்ளிவிட்டு அந்த பாத்திரத்தால் சங்கப் பொருளாளர் வழக்கறிஞர்கள் கிஷோர் குமாரை கடுமையாக தாக்கினர். மேலும் அங்கு போடப்பட்டிருந்த நாற்காலிகளை எடுத்து அவர் மீது வீசி எறிந்து கடுமையாக தாக்கினர். அப்போது நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலிருந்து மூத்த வழக்கறிஞர்கள் வெளியே வந்து தாக்குதல் நடத்திய வழக்கறிஞர்களை அங்கிருந்து வெளியேறும்படி கூறினர் அதனை தொடர்ந்து வழக்கறிஞர்கள் அங்கிருந்து சென்றனர்.
உணவு பரிமாறும் இடத்தில் பொறுமையாக காத்திருங்கள் என கூறிய சங்கத்தின் பொருளாளர் கிஷோர் குமாரை வழக்கறிஞர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சங்க பொருளாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் யார் என்பது குறித்து கண்டோன்மென்ட் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.