திருச்சி மேலச் சிந்தாமணியை சேர்ந்தவர் வெங்கடேசன் வயது 45. த/பெ. கோவிந்தசாமி. இவர் கட்டிட கட்டுமான தொழில் செய்து வருகிறார். அந்த வகையில் இவரது நண்பர் பாலு என்பவருக்கு ஸ்ரீரங்கம் வட்டம் கம்பரசம்பேட்டை கிராமம், ஜெயராம் நகரில் ஒப்பந்த அடிப்படையில் வீடு கட்டி கொடுத்துள்ளார். அந்த வீட்டிற்கு குடியிருப்புக்கான மின் வசதியும் (Domestic) பெற்றுக் கொடுத்துள்ளார். பிறகு பாலு அந்த குடியிருப்பினை வியாபார தளங்களுக்கு வாடகைக்கு விட நினைத்து குடியிருப்புக்காகப் பெற்ற மின் இணைப்பினை வணிக பயன்பாட்டுக்கு மாற்றி தரும்படி வெங்கடேசனிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அதன் பேரில் காண்ட்ராக்டர் வெங்கடேசன் கடந்த ஜனவரி மாதத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை திருச்சி தென்னூர் EB அலுவலகத்தில் உள்ள சிந்தாமணி பிரிவில் கொடுத்துள்ளார்.
விண்ணப்பம் அளித்து மூன்று மாதங்களாக எந்த நடவடிக்கையும் இல்லாததால் காண்ட்ராக்டர் வெங்கடேசன் சம்மந்தப்பட்ட சிந்தாமணி பிரிவுக்கான AE திரு.ராஜேஷ் என்பவரை கடந்த 17 4 2023 அன்று காலை சந்தித்து தனது விண்ணப்பத்தின் நிலை குறித்து கேட்டுள்ளார். அதற்கு உதவி பொறியாளர் ராஜேஷ் இருபதாயிரம் லஞ்சமாக கொடுத்தால் மின் இணைப்பின் Tariff ஐ change செய்து தருவதாக கூறியுள்ளார். பின் வெங்கடேசன் கேட்டுக் கொண்டதன் பேரில் ஐயாயிரம் ரூபாய் குறைத்துக் கொண்ட உதவி பொறியாளர் ராஜேஷ் பதினையாயிரம் கொடுத்தால் மட்டுமே மின் இணைப்பு மாற்றம் செய்து தர இயலும் என்று கட்டாயமாக கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத வெங்கடேசன், திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையின் காவல்துறை கண்காணிப்பாளர் திரு மணிகண்டன் அவர்களிடம் வந்து புகார் அளித்துள்ளார். வெங்கடேசனின் புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறையினரின் ஆலோசனையின் பேரில் இன்று 20 4 2023 காலை 11 மணியளவில் வெங்கடேசனிடம் இருந்து உதவி பொறியாளர் ராஜேஷ் 15,000 லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கையும் களவுமாக பிடிபட்டார். குறிப்பு : மேற்படி டேரிஃப் சேஞ்ச் செய்வதற்கு அரசு கட்டணம் ரூபாய் 400 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.