திருச்சி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ரூபாய் 290 கோடி மதிப்பீட்டில் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 337 சதுர அடியில் 7 தளங்களுடன் கூடிய உலகத் தரம் வாய்ந்த கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் அமைய உள்ளது. இதனை இன்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.
இந்த நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தில் அறிவியல் மையம், குழந்தைகளுக்கான திரையரங்கம், குழந்தைகளுக்கான நூலகம் மற்றும் பாட புத்தகங்கள் பகுதி, ஆராய்ச்சி மையம், பயிலரங்கம் பல்நோக்கு கூடம் மற்றும் ரோபோட்டிக்ஸ் மற்றும் விளையாட்டு பகுதி, டிஜிட்டல் நூலகம், ஆங்கில நூலகம் உள்ளிட்டவைகள் அமைய உள்ளது. மேலும், இரண்டு முதல் ஏழு தளங்களுக்கு செல்லும் வகையில் மின் தூக்கி சேவைகளும் அமைக்கப்பட உள்ளது.