திருச்சி மாநகர காவல் நிலையங்களில் காவல் நிலைய பணிகள், கோப்புகள், ரோந்து பணிகள் மற்றும் காவல் பணிகள் வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப நவீனபடுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தமிழக காவல்துறையில், ரோந்து பணிகளை நவீனபடுத்த, “ஸ்மார்ட் காவலர்” செல்போன் செயலி (Smart Kavalar App) மூலம் மின்னணு ரோந்து பணி (E- beat) முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ரோந்து பணிகள் மற்றும் செயல்பாடுகளை டிஜிட்டல் முறையில் நிர்வகிப்பதற்கும், ரோந்து மற்றும் களக்காவல் பணிகளை மிகவும் திறம்படச் செய்வதற்கும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான நோக்கத்துடன், மின்னணு ரோந்து பணிகளை அமல்படுத்துவதற்கு காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் நிலைய எழுத்தர்களுக்கு 30 கையடக்க கணினிகள் (Tablets) வழங்கப்பட்டது.
2023-2024 நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில், தமிழ்நாடு முதலமைச்சர் காவல் நிலைய விசாரணை அதிகாரிகளான காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு விசாரணையின்போது வழக்கின் விவரங்களை பதிவு செய்யவும், ஆடியோ, வீடியோ பதிவு செய்யவும், குற்றவாளிகளின் புகைப்படங்கள், அறிக்கைகள், வழக்கு தொடர்பான கோப்புகள் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்யவும், விசாரணை அதிகாரிகளுக்கு டேப்லட் (Tablets) கருவிகள் வழங்க உத்தரவிட்டதன்பேரில், திருச்சி மாநகர காவல் விசாரணை அதிகாரிகளுக்கு ரூ.9,00,000/- செலவில் 30 டேப்லட் (Tablets) சாதனங்களை, தமிழக காவல்துறையின் நவீன திட்டங்களை அமல்படுத்தும் விதமாக, காவல் ஆணையர் திருமதி.M.சத்திய பிரியா, இ.கா.ப., அவர்கள் இன்று 14.06.2023ந்தேதி திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தில், 10 காவல் நிலையங்களுக்கு 30 கையடக்க கணினிகள் (Tablets) வழங்கி சிறப்புரையாற்றினார்.
மேலும், காவல் நிலையத்தின் நீதிமன்ற பணி, அழைப்பாணை (Summon), பிடியாணை (Warrant), மருத்துவமனை பணி, புகார் மனு, காவல் விசாரணை சரிபார்ப்புப் பணிகள் தொடர்பான பணிகளை பதிவு செய்து, தினசரி ஆணையிடவும், வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர ரோந்து பணியில் சந்தேக நபர்களை விசாரணை செய்தல், சந்தேக வாகனங்களை பரிசோதனை செய்தல், மூத்த குடிமக்கள் வீடுகளை சரிபார்த்தல் போன்ற பணிகளையும் கண்காணிக்க வசதி உள்ளது. இக்கருவியில் ஆங்கிலம் மற்றும் தமிழில் வாசகங்களை படிக்கவும், டைப் செய்யும் சிறப்பம்சம் வசதி கொண்டது. இந்நிகழ்ச்சியில், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் தலைமையகம், மற்றும் காவல் ஆய்வாளர்கள் சட்டம் & ஒழுங்கு ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.