திருச்சி மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் தமிழ்நாடு நீர்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் , திருவாரூர் , நாகபட்டினம் , மயிலாடுதுறை , பெரம்பலுார் , அரியலுார் மற்றும் புதுக்கோட்டை பங்கு பெற்ற மண்டல அளவிலான வர்த்தக தொடர்பு பணிமனை 2 நாட்களுக்கு கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது . இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து ஆட்சித் தலைவர் சிவராசு பேசுகையில் :-
தமிழ்நாடு நீர்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம் 2019-20ம் ஆண்டு முதல் திருச்சி மாவட்டத்தில் 4 உபவடிநீர் பகுதிகளில் 9.68 கோடி திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது . இத்திட்டத்தின் மூலம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களை உருவாக்கி அவற்றை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களாக ஒருங்கிணைத்து திருச்சி மாவட்டத்தில் நான்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளது . ” இரண்டு மடங்கு மகசூல் மூன்று மடங்கு வருமானம் ” விவசாயிகள் பெறுவதற்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு அனைத்து தொழில் நுட்ப உதவி மற்றும் தேவையான நிதி உதவிகளும் வழங்கப்படுகிறது என தெரிவித்தார் .
இந்த பணிமனை கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் முருகேசன், மேலாண்மை பணிகள் துணை இயக்குனர் சரவணன் , தோட்டக்கலை துணை இயக்குநர் விமலா, வேளாண்மை துணை இயக்குநர் மோகன், கால்நடை , பொதுப்பணித்துறை மற்றும் பொறியியல் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் தொழில் நுட்ப கருத்துக்களை எடுத்துரைத்து பேசினார்கள். மேலும் இந்த பணிமனை மூலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவன விவசாயிகளுக்கு உரியவிழிப்புணர்வு / தொழில் நுட்ப பயிற்சி வழங்கப்படுகிறது . விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கு , சந்தை ஒருங்கிணைப்பு செய்யும் பொருட்டு ( Market Linkage ) வல்லுநர்கள் மற்றும் உரிய நிறுவனங்கள் விவசாயிகளிடம் நேரடியாக கலந்துரையாடி உரிய ஒப்பந்தங்கள் போட ஆவண செய்யப்பட்டுள்ளது . இந்நிகழ்ச்சியில் ஏழு மாவட்டங்களை சார்ந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பங்குபெற்று தங்களது கருத்துக்கை பகிர்ந்து கொண்டனர்.
முன்னதாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை மற்றும் கண்காட்சிக்காக வைத்திருந்தனர் இதனை பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பார்வையிட்டு வாங்கி சென்றனர்.