திருச்சி மாவட்டம் 40 வது வார்டுக்குட்பட்ட திருவெறும்பூர் பிரகாஷ் நகர் விரிவாக்கப் பகுதியில் நேற்று பாதாள சாக்கடை ஆளிறங்கும் குழியில் அடைப்பு நீக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி சுப்பையா கன்ட்ரக்சன் ஒப்பந்த பணியாளர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரபு (வயது 32) என்பவர் இறக்கியவர் ஓரு மணிநேரத்திற்கு மேல் காணாத நிலையில் புதுக்கோட்டை திருவப்பூரைச் சேர்ந்த ரவி (வயது 38) என்பவர் பிரபுவை இறங்கி தேட சொல்லி தனியார் நிறுவன ஒப்பந்த மேற்பார்வையாளர்கள் நிர்பந்தித்ததன் விளைவாக இறங்கியவரும் விஷவாயு தாக்கி குழிக்குள்ளேயே உயிரிழந்தனர். பின்னர், தீயணைப்புத் துறையினரால் 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு துவாக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டன. இதைத்தொடர்ந்து, துப்புரவுத் தொழிலாளர்களின் உயிரிழப்புக்கு நியாயம் கேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், சிஐடியு, தீண்டாமை ஓழிப்பு முன்னணி, வாலிபர், மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் தலைமையில் துவாக்குடி அரசு மருத்துவமனை முன்பு அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இந்தச் சம்பவம் தொடர்பாக மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் தொழிலாளர்களாக பணியமர்த்துவதை தடை செய்தல் மற்றும் மறுவாழ்வுச் சட்டம் 2013, பிரிவுகள் 7, 9 ஆகியவற்றின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில் துவாக்குடி நகராட்சி அலுவலகத்தில் திருச்சி கோட்டாசியர் அருள் தலைமையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், ஒப்பந்ததாரர், போலீஸார், கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆகியோர் கலந்துகொண்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள், கம்யூனிஸ்ட் கட்சியினர் வேண்டுகோள் வைத்தனர். இதில், உடன்பாடு ஏற்பட்டது பேச்சுவார்த்தை முடிவடைந்தது. பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் ஜெயசீலன், மாவட்ட செயலாளர்கள் வெற்றிசெல்வம், சிவராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் லெனின், நடராஜன், கார்த்திகேயன், ரஜினிகாந்த், சிஐடியு மாவட்ட தலைவர் மணிமாறன் , பொருளாளர் மணிகண்டன், தீண்டாமை ஓழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் கனல்கண்ணன், திருவெறும்பூர் ஓன்றிய செயலாளர்கள் ரவி, குருநாதன், வாலிபர் சங்க நிர்வாகிகள் சேதுபதி, சந்தோஷ்,ரவி, காட்டூர் பகுதிக்குழு உறுப்பினர்கள் ஜாகீர், நவநீத கிருஷ்ணன், செந்தில், நல்லையன் உள்ளிட்ட தோழர்கள் 20 மணிநேரம் தொடர் போரட்டத்திற்கு பிறகு பிரேத பரிசோதனை செய்ய இருவரது உடல்களும் துவாக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி இளநிலை பொறியாளர் பிரசாந்த் அளித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் புதை சாக்கடை தூய்மை செய்யும் பணியில் ஈடுபடாத தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மேற்பார்வையாளர் இளவரசன், மேலாளர் கந்தசாமி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார். இதில் இளவரசனை கைது செய்துள்ளனர். கந்தசாமியை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *