திருச்சி மாநகராட்சி உறையூர் பகுதியில் உள்ள மின்னப்பன் தெரு, பணிக்கன் தெரு ஆகிய பகுதிகளில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதால் பரிதாபமாக 2 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் தற்போது வரை 120 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் அப்பகுதி முழுவதும் மாநகராட்சி ஊழியர்கள் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியிலும், பிளிச்சிங் பவுடர் தெளிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பாக வீடு வீடாக சென்று, பொது மக்களுக்கு நீரை காட்சி குடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் இன்று இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். வீடு வீடாக சென்று பொது மக்களை சந்தித்து, குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை எனவும், தற்போது குளோரின் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் இந்த ஆய்வின் போது மூன்று இடங்களில் பொது மக்கள் கண்முன்னே குடிநீர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.