திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கொப்பாவளி பகுதியில் 450 ஏக்கர் விளைநிலங்களில் விவசாயிகள் சம்பா நெல் மற்றும் வாழை சாகுபடி செய்துள்ளனர். தொடர் கன மழையின் காரணமாக பாசன வாய்க்கால்களில் அதிக நீர் வரத்து ஏற்பட்டுள்ளதால் வெள்ள நீரானது கிராமத்தைச் சுற்றியுள்ள வயல்வெளியில் புகுந்து நெல் பயிர்கள் நீரில் மூழ்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் பெரும் மன வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து விவசாயி பன்னீர்செல்வம் கூறுகையில்,கொப்பாவளி காட்டூர் சாலையில் இருபுறங்களிலும் 400 ஏக்கர் விவசாய நிலங்களில் வாழை மற்றும் சம்பா நெல் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் பயிரிடப்பட்டு 15 நாட்கள் ஆன நெல் பயிரும், 20 நாள் ஆன பயிரும் இருக்கு இது அனைத்துமே 3 நாட்களாக தண்ணீரில் மூழ்கியுள்ளது.இதற்கு முழு காரணம் சாலையில் 9 இடங்களில் சிறிய அளவிலான சிமெண்ட் வடிகால் குழாயை பதித்ததனால் அதில் அடைப்பு ஏற்பட்டு தற்பொழுது அனைத்து நெல் பயிர்களும் தண்ணீரில் மூழ்கியிருக்கிறது. இதேபோன்று கடந்த 2005ஆம் வருடம் பாதிப்பு ஏற்பட்ட போது நாங்கள் இது குறித்து அறிவுறுத்தினோம் ஆனால் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
ஆனால் தற்போது லால்குடி சட்டமன்ற உறுப்பினர் அறிவுறுத்தலின் பெயரில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஜேசிபி எந்திரத்தின் மூலம் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். பொதுப்பணித் துறை அதிகாரிகள் இதுவரை வந்து பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இந்த விளைவுக்கு காரணமாக இருக்கும் சிமெண்ட் குழாய்க்கு பதிலாக அந்த இடத்தில் பாலம் கட்டித் தரவேண்டும். சாலையின் இரு புறங்களில் உள்ள 300 மின்சார மோட்டார்கள் தண்ணீரில் மூழ்கி விட்டது இதனை சரி செய்வதற்கு குறைந்தது 15 ஆயிரம் செலவாகும். இதற்கு அரசு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் சிமெண்ட் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ள இடத்தில் பாலம் கட்டித் தர வேண்டும்.