திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் அகிலா. குறு விவசாயியான அகிலாவின் தந்தையார் வையாபுரி அய்யம்பாளையம் கிராமத்தில் 29 சென்ட் நிலம் வாங்கியுள்ளார். இந்த நிலத்தை தனது தந்தையார் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டி அகிலா மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனு செய்துள்ளார். இவரது மனுவினை பரிசீலனை செய்த அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் பழனியம்மாள் வயது 44 என்பவர் பட்டா பெயர் மாற்றம் செய்து தருவதற்கு 5000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பெயர் மாற்றம் செய்து தர முடியும் என்று கண்டித்து கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத அகிலா திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையில் அளித்த புகாரின் பேரில், திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் ஆலோசனையின் பேரில், இன்று மதியம் சுமார் 2 மணியளவில் அய்யம்பாளையம் விஏஓ அலுவலகத்தில் அகிலாவிடமிருந்து விஏஓ பழனியம்மாள் ரூபாய் 5000 லஞ்ச பணத்தை கேட்டு வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டார். புகார்தாரர் அகிலாவின் தந்தையாரால் வாங்கப்பட்ட 29 சென்ட் நிலத்தின் மொத்தமதிப்பே ரூபாய் 12000 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.