திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து உறையூர், குழுமணி வழியாக திருச்சி அயிலப்பேட்டை நோக்கி சென்ற மாநகர அரசு பேருந்து உறையூர் சாலை ரோடு பஸ் ஸ்டாப் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென பேருந்தின் இன்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது.
இதை கண்ட ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தி விட்டு இஞ்சின் பகுதியை திறந்து பார்த்தபோது அங்கிருந்த செல்ப் மோட்டாரிலிருந்து தீ பற்றி எரிந்தது. உடனடியாக அரசு பேருந்தின் ஓட்டுநர் பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகளை விரைவாக கீழே இறங்கும் படி கூறினார். ஒருசில பயணிகள் பேருந்தில் இருந்த அலறி அடித்துக் கொண்டு பேருந்தை விட்டு இறங்கி ஓடினர்.
உடனடியாக அரசு பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அங்கிருந்த பொதுமக்கள் தண்ணீரை ஊற்றியும், சாலையின் ஓரத்தில் கிடந்த மண்ணை அள்ளி வந்து தீ மீது கொட்டியதில் தீ அணைந்தது.
மேலும் பொதுமக்கள் உதவியுடன் சாலை நடுவே இருந்த அரசு பேருந்தை தள்ளி ஓரத்தில் நிறுத்தி வைத்தனர். மேலும் அரசு பேருந்தின் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த உறையூர் போலீசார் போக்குவரத்து நெரிசலை சீர் படுத்தினர்.