திருச்சி பெல்ஸ் கிரவுண்ட், ரயில்வே காலனி, முதலியார் சத்திரம் மற்றும் ஆலம் தெரு ஆகியவற்றின் மத்தியில் அமைந்திருக்கும் அருள்மிகு விஷம் நீக்கி உயிர் கொடுத்த தேவி ஸ்ரீ கருமாரி அம்மன் கோவிலின் 45 ஆம் ஆண்டு ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் குத்துவிளக்கு பூஜை இன்று நடைபெற்றது.
முன்னதாக கடந்த 18ஆம் தேதி அருள்மிகு விஷம் நீக்கி உயிர் கொடுத்த தேவி ஸ்ரீ கருமாரி அம்மன் கோவிலின் 45 ஆம் ஆண்டு திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து திருச்சி காவேரி அம்மா மண்டபம் படித்துறையில் இருந்து பக்தர்கள் கரகம், பால்குடம், அக்னி சட்டி, அலகு காவடி, முளைப்பாரி எடுத்து வந்து கோவில் சன்னதி முன்பாக பூக்குழி இறங்கினர்.
மேலும் கடந்த 29ஆம் தேதி கருமாரி அம்மனுக்கு ஊஞ்சல் அலங்காரமும் மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான இன்று ஆடி 18 மூன்றாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு அருள்மிகு விஷம் நீக்கி உயிர் கொடுத்த தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் வளாகத்தில் குத்துவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.