திருச்சி ராமச்சந்திரா நகர் அருள்மிகு வரம்தரும் ஸ்ரீ எல்லை காளியம்மன் திருக்கோவிலின் 25 ஆம் ஆண்டு பூக்குழி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆறு படித்துறையில் இருந்து தீர்த்த குடம், பால்குடம், தீச்சட்டி ஏந்தி அழகு குத்தியும் கரகம் எடுத்தும்
குழந்தை பாக்கியம் வேண்டி பிராத்தனை செய்தவர்கள் தங்களின் குழந்தைகளை கரும்புத் தொட்டிலில் படுக்க வைத்து ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலமானது சத்திரம் பேருந்து நிலையம் வழியாக மெயின் கார்டு கேட், மேலாண் சாலை, காந்தி மார்க்கெட், பாலக்கரை, மேலப்புதூர்,
தலைமை தபால் நிலையம், ரயில்வே ஜங்ஷன் வழியாக ராமச்சந்திரா நகர் பகுதியில் உள்ள கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இறங்கி தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. அருள்மிகு வரம் தரும் ஸ்ரீ எல்லை காளியம்மன் கோவிலில் பூக்குழி விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமை அறங்காவலர் ரவிச்சந்திரன் விழா குழு கௌரவ தலைவர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் சபரி ராஜ், சுப்ரமணியன், உதயசேகர், முருகேசன், மற்றும் விழா குழுவினர் ஆகியோர் செய்திருந்தனர்.