முற்கால கரிகால் சோழனின் குலதெய்வமாக பூஜிக்கப்பட்டு, வெற்றியின் தெய்வமாக கொண்டாடப்படும், திருச்சி தென்னூர் அருள்மிகு உக்கிர மாகாளியம்மன் சித்திரை தேர் திருவிழா கடந்த 4-ந்தேதி மகா அபிஷேகம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ச்சியாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் திருவீதி உலா நடந்து வந்தது.
நேற்று முன்தினம் (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு திருத்தேருக்கு முகூர்த்த கால் நடும் விழா மற்றும் அபிஷேகம் நடந்தது. நேற்று ( ஞாயிற்றுக்கிழமை ) மகா அபிஷேகம் மற்றும் மாலையில் குதிரை வாகனத்தில் அம்மன் திரு வீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேர் திருவிழா இன்று ( திங்கட்கிழமை) கோலாகலமாக மிதுன லக்னத்தில் காலை 9 மணிக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கோவிலில் இருந்து கண்ணதாசன் சாலை, காந்தியடிகள் தெரு, வீரமாமுனிவர் தெரு வழியாக தேர் மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். நாளை( செவ்வாய்க் கிழமை) விடையாற்றி பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. இந்த சித்திரை தேர் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை தெய்வீக மகா சபை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.