திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் 22-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு எம்.ஐ.இ.டி. கல்வி நிறுவனங்களின் தலைவர் அல்ஹாஜ் முகமது யூனுஸ் தலைமை வகித்து தலைமை உரையாற்றினார். எம்.ஐ.இ.டி கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் முனைவர் அப்துல் ஜலீல் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தன்னுடைய இதயம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு வெற்றி என்பது இயங்கும் படிக்கட்டில் கிடைப்பதல்ல அதற்கு ஏணிப்படிகள் ஏற வேண்டும் என்று உரையாற்றினார்.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இந்திய தொழில்நுட்ப கழகத்தின் புல முதல்வர் (திட்டமிடல்) பேராசிரியர் முனைவர் சாரதி கலந்துகொண்டு சிறப்புரையாற்றி 224 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். அதில் பட்டமளிப்பு விழா என்பது முடிவல்ல மாணவர்களாகிய உங்களுடைய வளர்ச்சியின் ஆரம்பம் என்றார். சுயம் ப்ளஸ் என்ற இணைய வழி படிப்பில் அனைவரையும் கட்டாயமாக சேர்ந்து அவரவர் துறை சார்ந்த களத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். மேலும் மாணவர்கள் தங்களின் நெறிமுறைகளையும் பாரம்பரியத்தையும் எங்கே சென்றாலும் மறக்கக்கூடாது. ஏனென்றால் நீங்களே நாளைய தலைவர்கள் மற்றும் நாளைய உலகில் என்ன விட்டுவிட்டு செல்ல போகிறார்கள் என்று இந்த உலகம் உற்றுப்பார்த்துக் கொண்டு இருக்கும். மேலும் முன்னாள் மாணவர்களுக்கு சிறந்த முன்னாள் மாணவன் அல்லது மாணவி என்று பட்டம் வழங்கப் படலாம் என்று பரிந்துரைத்தார்.
முன்னதாக இந்த வருடத்திற்கான நீதிபதி பக்கீர் முகமது சுழல் கோப்பையானது பல்கலைக்கழக தேர்வில் முதலிடம் பிடித்த கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு வருகை தந்த மாணவர்கள், பெற்றோர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் நவீன்சேட் வரவேற்று பேசினார்..கட்டிடவியல் துறை உதவிப் பேராசிரியர் சந்தோஷ்குமார் சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார். நிறைவாக மேலாண்மைத்துறை துறைத்தலைவர் முனைவர் ஆண்டனி பிரகாஷ் நன்றி உரையாற்றினார். இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழாவின் ஒருங்கிணைப்பாளரான அறிவியல் மற்றும் மனிதநேயத் துறையின் துறைத்தலைவர் மணிகண்டன் செய்திருந்தார்.