திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, துபாய், மஸ்கட், ஓமன், தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு வாரத்திற்கு நூறுக்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு வாரத்திற்கு 70 உள்நாட்டு விமான சேவைகள் இயங்குகிறது. புதிய விமான முனையம் பயன்பாட்டிற்கு வந்த பின்னர் ஒரே நேரத்தில் பயணிகள் வருகை பகுதியில் சுமார் 3500 பேரும், புறப்பாடு பகுதியில் சுமார் 2500 பேரும் கையாளப்பட்டு வருகிறார்கள். விமான பயணிகளிடம் இருந்து பெறப்படும் ஈரமான கழிவுகள், உலர் கழிவுகள் மற்றும் திடக்கழிவுகள், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் வளாகத்தில் பெறப்படும் உணவு கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், காகித கழிவுகள் போன்றவற்றை முறையாக கையாண்டு அவற்றை தரம் வாரியாக பிரித்து எடுத்து நிரந்தரமாக அழிப்பதற்கு விமான நிலைய நிர்வாகம் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை.

இதன் காரணமாக விமான நிலைய வளாகம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் குப்பைகள் தேங்கியது. அவற்றை விமான நிலைய நிர்வாகம் அவ்வப்போது வாகனங்களில் ஏற்றி வெளி இடங்களுக்கு கொண்டு செல்கிறது. விமானங்கள் திருச்சியில் இருந்து புறப்படும் போதும், விமானங்கள் தரை இறங்கும்போதும் உணவிற்காக இந்த கழிவுகளை தேடி பறந்து வரும் பறவைகள் விமானத்தின் மீது மோதினால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதை தடுப்பதற்கு விமான நிலையம் நிர்வாகம் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, திருச்சி மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் திடக்கழிவுகளை மேலாண்மை செய்வதற்காக தனியாக ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் படி மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ரூபாய் 1.50 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த நிறுவனம் தினமும் விமான நிலையத்தில் சேகரிக்கப்படும் சுமார் 1 டன் கழிவுகளை அப்புறப்படுத்துவது போன்ற வேலைகளை 60 மாத காலம் செய்ய வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தை திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் விமான நிலைய இயக்குநர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்