திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்துவ கல்லூரியில் காது மூக்கு தொண்டை மற்றும் உடற்கூறியியல் துறை சார்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை வகுப்பு திருச்சி அரசு மருத்துவமனை டீன் குமரவேல் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த பயிற்சியில் காஷ்மீர், ஆந்திரா, கன்னியாகுமரி, கேரளா என இந்தியா முழுவதிலிருந்து 150-க்கும் மேற்பட்ட இளநிலை, முதுகலை மற்றும் மருத்துவர்கள் பங்கேற்றனர். இந்த பயிற்சி வகுப்பில் தானமாக தரப்பட்ட பதப்படுத்தப்பட்ட மனித உடல்களை கொண்டு உலகப் புகழ்பெற்ற காது, மூக்கு,தொண்டை நிபுணர் மருத்துவர் ஜானகிராமன் மருத்துவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்தார்.
முகத்தில் காயங்கள் ஏற்படாமலேயே மூக்கு துவாரத்தின் வழியாக கருவிகளை செலுத்தி மூளையின் அடிப்பகுதியில் உள்ள கட்டிகள் அல்லது வேறு ஏதாவது உள்ள பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய அறுவை சிகிச்சை பயிற்சி இங்கு அளிக்கப்பட்டது. தமிழகத்திலே இதுதான் முதல்முறையாக நடைபெறுகிறது. இந்த பயிற்சிக்காக இந்தியா முழுவதிலும் இருந்து மருத்துவர்கள் வந்திருக்கின்றனர். குறிப்பாக மண்டை ஓட்டை உடைக்காமல் அறுவை சிகிச்சை செய்யும் பயிற்சி அளிக்கப்பட்டது இதில் கலந்துகொண்ட மருத்துவர்கள் அனைவரும் கற்று பயனடைந்தனர்