மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் நேற்று முன் தினம் கொள்ளிடம் ஆற்றிற்கு வந்தது 60 ஆயிரம் கன அடி கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் சென்றது. இதில் திருவானைக்காவல் – நம்பர் ஒன் டோல்கேட்டை இணைக்கும் வகையில் உள்ள பாலத்திற்கு அருகே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. அதிக அளவு தண்ணீர் வந்ததன் காரணமாக அந்த தடுப்பணை இடிந்தது. இந்த நிலையில் அந்த தடுப்பணைக்கு அருகே இருந்த மின் கோபுரம் ஒன்று நேற்று காலை முதல் விழுந்து விழும் நிலையில் இருந்தது. அந்த கோபுரத்தை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் நேற்று காலை முதல் ஈடுபட்டு வந்தனர். மின்வினியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய மின் வினியகம் மாற்று வழியில் வழங்கப்பட்டது. இந்த நிலையில் கோபுரத்தை விழுந்து விடாமல் செய்த முயற்சிகள் பலனளிக்காமல் நேற்று நள்ளிரவு மின் கோபுரம் கொள்ளிடம் ஆற்றில் சரிந்து விழுந்தது. இந்த நிலையில் இன்று காலை அந்த மின் கோபுரத்திற்கு அருகே இருந்த மற்றொரு மின் கோபுரமும் கொள்ளிடத்தில் விழுந்தது. இரண்டு மின் கோபுரங்கள் விழுந்த நிலையில் அந்தப் பகுதியை திருச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மணிவாசன், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆகியோர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், தடுப்பணை இடிந்ததால் அதிக அளவு வேகத்தில் நீர் இடிந்த பகுதியில் சென்றது. அந்த நீரின் பாதிப்பு மின் கோபுரத்தில் இருந்ததால் மின்கோபுரம் விழுந்துள்ளது. நேற்று மின்விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டதால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பொதுமக்களுக்கு மின்விநியோகம் மாற்று வழியில் சீராக வழங்கப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆற்றில் உள்ள மற்ற மின்கோபுரங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்கிற நிலையில் மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். மாவட்ட நிர்வாகமும் அதனை கண்காணித்து வருகிறது. காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் நீர் வரத்து அதிகம் இருப்பதால் பொது மக்கள் யாரும் நீர்நிலைகளுக்கு குளிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. நாளை ஆடி பெருக்கை முன்னிட்டு குறிப்பிட்ட படித்துறைகளில் மட்டும் கட்டுப்பாடுடன் பக்தர்கள் நீராட அனுமதி வழங்கப்படுகிறது அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும்.கொள்ளிடம் பாலத்தின் அருகே கட்டப்பட்டிருந்த தடுப்பணை எப்படி இடிந்து விழுந்தது என்பது குறித்து நீர் வடிந்த பிறகு தான் ஆய்வு செய்ய முடியும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்