திருச்சி கோட்டத்தில் 4 ரயில் நிலையங்கள் மேம்படுத்தும் திட்டத்திற்கு ஆகஸ்ட் 6 ஆம் தேதி, அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றார் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் எம் எஸ். அன்பழகன். இது குறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் அவர் கூறியது: அம்ரித் பாரத் திட்டம் மூலம் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், உலகத் தரம் வாய்ந்த வசதிகளுடன் ரயில் நிலையங்கள் தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது.
அதிநவீன வசதிகள், அழகிய முகப்பு, சுத்தமான மற்றும் விசாலமான காத்திருப்பு அறைகள், பயணிகளுக்கு ஏற்ற நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படுகின்றன. அமிர்த் பாரத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 500 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான அடிக்கல் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதில் தெற்கு ரயில்வேயில் 25 நிலையங்கள் மேம்பாட்டுக்காக மொத்தம் ரூ. 600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டில் 18 நிலையங்களும், கேரளாவில் 5 நிலையங்களும், கர்நாடகாவில் 1, புதுச்சேரியில் ஒன்றும் முதல் கட்டத்தில் அடங்கும்.திருச்சி கோட்டத்தில் தஞ்சாவூர், விழுப்புரம் மயிலாடுதுறை, பாண்டிச்சேரி ஆகிய 4 ரயில் நிலையங்கள் இடம் பெற்றுள்ளன என்றார். நிகழ்வின் போது கோட்டை வணிக முதுநிலை மேலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.