திருச்சி ஜமால் முகமது கல்லூரிக்கு “A++” உயர்தரம் வழங்கப்பட்டுள்ளது குறித்து ஜமால் முகமது கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் டாக்டர்.காஜா நஜீமுதீன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- திருச்சி ஜமால் முகமது கல்லூரி தேசிய தரமதிப்பீட்டு அமைப்பால் நான்காவது சுழற்சியின் போது மொத்த மதிப்பு 4.0-க்கு 3.69 உயர்தரத்துடன் கூடிய “A++” மதிப்பெண் பெற்றுள்ளோம். இம்மதிப்பீடு கல்லூரியின் பாடத்திட்டம்; கற்பித்தல், கற்றல் மற்றும் மதிப்பீடு; ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் மற்றும் விரிவாக்கம்; உள்கட்டமைப்பு மற்றும் கற்றல் வளங்கள்; மாணவர்கள் ஆதரவு மற்றும் முன்னேற்றம்; நிர்வாகம், தலைமைத்துவம், மேலாண்மை மற்றும் நிறுவன மதிப்புகள்; முதலிய அம்சங்களின் கீழ் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
கல்லூரிக்கான ஆய்வு தேசிய தரமதிப்பீட்டு அமைப்பால் உருவாக்கப்பட்ட குழுவின் மூலம் செப்டம்பர் 20 மற்றும் 21ம் தேதிகளில் நடைபெற்றது. இக்குழு கல்லூரியில் உள்ள அனைத்து துறை மற்றும் பிரிவுகளையும் நேரில் பார்வையிட்டு, துறைகளின் சிறப்பம்சங்களை அறிந்து கொண்டனர். மேலும், மாணவ, மாணவியர்களோடும், மாணவ, மாணவியரின் பெற்றோர்களோடும், முன்னாள் மாணவர்களோடும், ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களோடும் கலந்துரையாடி கல்லூரியின் பன்முகத்தன்மையைப் பற்றி தெரிந்து கொண்டனர். இந்த குழு ஆய்வின் போது கல்லூரி ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர். முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியதாக அமைந்திருந்தது.
இக்குழு ஆய்விற்கு கல்லூரியின் உள்தரகட்டமைப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர்.டி.ஐ.ஜார்ஜ் அமலரெத்தினம் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பாக வழிநடத்தினர். தேசிய தரமதிப்பீடு மற்றும் அங்கீகார அமைப்பால் நமது ஜமால் முகமது கல்லூரிக்கு “A++” உயர்தரம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். அருகில் பொருளாளர் ஹாஜி ஜமால் முகமது, உதவிச்செயலளர் முனைவர்.அப்துஸ் சமது, கௌரவ இயக்குநர் முனைவர். அப்துல் காதர் நிகால் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர். இஸ்மாயில் முகைதீன், ஆகியோர் உடன் இருந்தனர்.