தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்கள் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திற்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து ரூ. 19.65 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளத்தில் 22 வகுப்பறைகள். வேதியியல் ஆய்வகம், கணினி ஆய்வகம், நூலகம், பல்நோக்கு அறை, உயிரியல் ஆய்வகம், இயற்பியல் ஆய்வகம், முதல் உதவி மற்றும் விளையாட்டு அறை 1, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அறைகள் 3 அலுவலக அறை, பெண்கள் மற்றும் ஆண்கள் ஓய்வறை, பெண்கள் மற்றும் ஆண்கள் மாற்றுத்திறனாளி அறைகள் 6, RO குடிநீர் வசதிகள், 50,000 லிட்டர் கொள்ளவு கொண்ட 2 தரை தண்ணீர் தொட்டிகள். தடையற்ற மின் வழங்கல், உயர் மட்ட விளக்கு போன்ற வசதிகளுடன் துவாக்குடி பகுதியில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

1,314 மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் அந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதேபோல தலா ரூ.18.57 கோடி செலவில் மாணவர்கள், மாணவிகளுக்கு கட்டப்பட்டுள்ள தனி தனி விடுதி வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மொத்தமாக ரூ.56.47 கோடியில் ஹைடெக் ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறைகள், விடுதி வசதி உட்பட பல்வேறு அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ள அரசு மாதிரி பள்ளி கட்டிடத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். அதன் பின்னர் மாதிரி பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வசதிகள் அனைத்தையும் பார்வையிட்டார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், மெய்யநாதன் , ரகுபதி, சிவசங்கர், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ,எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *